உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் மிகக் கொடூரமான முறையில் செயின் பறிப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரைக் கதிகலங்கச் செய்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் பின்னால் ஒரே பைக்கில் இருவர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்தப் பெண்ணின் அருகில் பைக் வந்தவுடன், பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை  பிடுங்குகிறான். நகையைப் பறித்த அடுத்த நொடியே, பைக்கை ஓட்டி வந்த நபர் அதிவேகமாக பைக்கை எடுத்து  கொண்டு அங்கிருந்து நெடுஞ்சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் தப்பியோடுகிறான்.

 

 

இந்த அதிர்ச்சிச் சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சமயம் பார்த்து இந்த கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல் எவ்வளவு வேகமாக நடந்தது என்றால், அந்தப் பெண்ணால் சில நொடிகள் தனக்கு என்ன நடந்தது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல் திகைத்து நின்றார்.

இந்த ஒட்டுமொத்தக் கொடூரக் காட்சியும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, தலைமறைவாக உள்ள அந்த இரு பைக் கொள்ளையர்களையும் பிடிக்க போலீசார் தற்போது தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.