மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லோஹகாட் கோட்டையிலிருந்து, தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தப்பியோட வழியில்லாமல் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி சியா கோயல், தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஊடகங்களை நோக்கி மிகவும் ஆபாசமான மற்றும் அநாகரீகமான முறையில் கையை காட்டி சைகை செய்ததாகக் கூறப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி ஒட்டுமொத்த பொதுமக்களையும் கொதித்தெழச் செய்துள்ளது.

சியாவின் இந்த கொடூரமான நடத்தை குறித்து ஒடிசா மாநிலத்தின் ரயில்வே மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். தனது நீண்டகாலப் பணியில் பல கொடூரமான குற்றவாளிகளைப் பார்த்துள்ளதாகவும், ஆனால், எந்தவொரு தப்பும் செய்யாத ஒருவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு, முகத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியோ, மன உளைச்சலோ இல்லாமல் இவ்வளவு இரக்கமற்று இருக்கும் ஒருவரைப் பார்ப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூன் 18 அன்று நடந்த இந்த சம்பவத்தில், கேதன் அகர்வால் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து இறந்துவிட்டதாகவே சியா கோயல் நாடகமாடியுள்ளார். ஆரம்பத்தில் இது விபத்து மரணம் எனப் பதிவு செய்யப்பட்டாலும், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த கிராமப்புற போலீசாருக்கு அங்கிருந்து ஒருவர் தவறி விழ வாய்ப்பே இல்லை என்ற சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து லோஹகாட் கோட்டையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 33 டிகிரி செல்சியஸ் வெயிலில் ‘ஹுடி’ (Hoodie) ஆடை அணிந்து சந்தேகத்திற்கு இடமாகத் திரிந்த சேத்தன் சௌத்ரி என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையே இந்த கொலை வழக்கின் பின்னணியில் இருந்த சியாவின் மாஸ்டர் பிளானை அம்பலப்படுத்தியது. திட்டமிட்டபடி குளிர்ந்த ரத்தத்துடன் அரங்கேற்றப்பட்ட இந்த கொலைச் சம்பவம் குறித்து, எஸ்பி சந்தீப்சிங் கில்லின் வழிகாட்டுதலின்படி போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.