உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 69-வது தேசிய அளவிலான பள்ளி மல்யுத்தப் போட்டியில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற 18 இளம் வீரர்கள், மிகக் கொடுமையான முறையில் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு காணொளியில், அந்த வீரர்கள் ரயிலின் கழிப்பறைக்கு வெளியேயுள்ள இரும்புத் தரையில் தங்களது பைகளுடன் நெரிசலில் அமர்ந்து பயணிப்பதைக் காண முடிகிறது.

மாநிலத்திற்காக விளையாடச் செல்லும் வீரர்களுக்குக் குறைந்தபட்ச வசதிகளைக் கூடச் செய்து தராத அதிகாரிகளின் அலட்சியம் இதைப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீரர்களுக்குச் செல்வதற்கோ அல்லது திரும்புவதற்கோ உறுதி செய்யப்பட்ட (Confirmed) ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பது கூடுதல் அவலம். இதனால் பொதுப் பெட்டிகளில் கூட இடம் கிடைக்காமல், கழிப்பறை ஓரம் அமர்ந்து நீண்ட தூரம் பயணித்துள்ளனர்.

வெற்றிகளைக் கொண்டு வரும் வீரர்களை இவ்வளவு கேவலமாக நடத்திய விளையாட்டுத் துறைக்கு எதிராகப் பலரும் தங்களது கோபத்தைப் பதிவிட்டு வருகின்றனர். “இப்படியெல்லாம் நடந்தால் இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது எப்படி ஆர்வம் வரும்?” என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.