உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலனுடன் திருமணம் கைகூடாத ஏக்கத்தில் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ராயிச் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு, அவரது குடும்பத்தினர் விருப்பமில்லாத ஒருவருடன் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை மதியமே காவல் நிலையத்திற்கு வந்த அந்தப் பெண், தனது காதலனையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகப் பிடிவாதம் பிடித்தார்.

போலீசார் முன்னிலையிலேயே அவரது குடும்பத்தினர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் அவர் கேட்கவில்லை. திடீரென தனது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அவர் குடித்ததால், காவல் நிலைய வாசலிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.