ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது இரு மைனர் மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாகத் தனது மூத்த மகளை அந்த நபர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், சமீபத்தில் இளைய மகளிடமும் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இளைய மகள் தனது தாய் மற்றும் அக்காவிடம் தெரிவித்ததை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அந்த நபர் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.
தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அந்த நபர், தனது மூத்த மகளை ஆறு வயதிலிருந்தே மிரட்டிப் பணிய வைத்து இந்த கொடுமையைச் செய்து வந்துள்ளார். இந்த வழக்கை ஏசிபி மங்கலேஷ் சுந்தாவத் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
