டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி அந்த குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.
இதற்காக அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய அவர், ஒரு கட்டத்தில் விஷம் கலந்த குளிர்பானம் மற்றும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர்களது உடல்களை ஒரு காரில் வைத்து பீராகர்ஹி மேம்பாலத்திலேயே விட்டுச் சென்றுள்ளார். இந்த கொடூரச் செயலைச் செய்த கம்ருதீனை போலீசார் உத்தராகண்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அந்த போலிச் சாமியார் ‘ஆவி மூலம் அற்புதங்கள் செய்வதாகக் கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்தது. பெண்களின் புகைப்படங்களைச் சேகரிப்பது, மந்திரங்கள் ஓதுவது எனப் பல மூடநம்பிக்கை செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் அவரைப் பிடித்தனர். கைதான அந்த நபர் மீது ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பல கொலை வழக்குகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
