பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில், சிறுமிகள் விளையாட்டாகச் செய்த ஒரு செயல் பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க ஐந்து சிறுமிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் கொக்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க விஷத்தைக் கையில் வைத்துள்ளனர். “இந்த விஷத்தைக் குடித்தால் உண்மையிலேயே செத்துப்போவோமா அல்லது பிழைத்துக்கொள்வோமா என்று பார்ப்போம்” என அவர்களில் ஒரு சிறுமி விபரீதமான யோசனையைக் கூற, மற்ற நண்பர்களும் அதற்குச் சம்மதித்துள்ளனர்.

சிறுமிகள் அனைவரும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து குடித்த நிலையில், அவர்களில் நால்வர் அடுத்தடுத்து நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒரு சிறுமி மட்டும் மிகக் குறைந்த அளவே உட்கொண்டுவிட்டு, உடனடியாகத் துப்பிவிட்டதால் உயிர் பிழைத்துள்ளார்.

அவர் வீட்டிற்கு ஓடிச் சென்று தனது குடும்பத்தினரிடம் விஷயத்தைக் கூற, அவர்கள் உடனடியாக அவருக்கு வேப்பிலைச் சாறு கொடுத்து வாந்தி எடுக்கச் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.