உத்தரகாண்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் மறைந்திருந்த சிறிய பூனைக்குட்டி ஒன்றை, காவல்துறை அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் கவனித்துப் பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் காவல்துறை அதிகாரி முகமது இர்ஷாத், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் அடியில் ஏதோ அசைவு இருப்பதை விழிப்புடன் கவனித்து, உடனடியாக ஓட்டுநரை வாகனத்தை நகர்த்த வேண்டாம் எனச் சைகை மூலம் தடுத்துள்ளார்.
View this post on Instagram
“>
பின்னர் காரின் அடியில் குனிந்து ஆராய்ந்த போது, தனக்கு வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் பயந்து ஒளிந்திருந்த பூனைக்குட்டி ஒன்றை அவர் மீட்டுத் தன் கைகளில் எடுத்து அரவணைத்துள்ளார்.
“பாதுகாப்பான வீட்டுப் பயணத்திற்கான சாலை” என்ற தலைப்புடன் இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர, அதனைப் பார்த்த விலங்கு ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் அதிகாரியின் கருணை உள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும், குறிப்பாகத் தெரு விலங்குகள் அதிகம் உள்ளபகுதிகளில் ஓட்டுநர்கள் வாகனங்களை எடுப்பதற்கு முன் சக்கரங்கள் மற்றும் அடியில் விலங்குகள் ஏதேனும் தஞ்சமடைந்துள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
