உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராமத்தில், தனது தந்தையின் கொடூரக் கொலைக்குக் காரணமான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மேலும் கடந்த சில நாட்களாகவே தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அந்த இளைஞன் தனது தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான். ஆனால், தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் சம்பவத்தன்று இரவு, வீட்டின் அறையில் அவனது அண்ணி இருக்கும்போதே, அந்த இளைஞன் திடீரென வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று “என் தந்தை எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை, அதனால் நான் அவரைக் கொன்றுவிட்டேன்” என்று சத்தமாகக் கத்தியுள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அங்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அந்த இளைஞன், தனது தந்தையைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, இரத்தக் கறைகளுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அனைவரும் உறைந்து போயினர்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோட முயன்ற அந்த இளைஞனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.