திருவொற்றியூர் அருகே தந்தையைப் போலவே மகனும் இரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவர், திருவள்ளூர் இரயில்வேயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

மேலும் நேற்று மாலை பணிக்குச் செல்வதற்காக திருவொற்றியூர் மற்றும் வ.உ.சி இரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து இரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு நெஞ்சை உருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கிஷோர்குமாரின் தந்தை வேணுகோபால் ஏற்கனவே இரயில்வே ஊழியராக இருந்தபோது, அவரும் இதேபோல் இரயில் மோதியே உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் தந்தையின் மறைவுக்குப் பிறகு வாரிசு அடிப்படையில் கிஷோர்குமாருக்கு இந்த வேலை வழங்கப்பட்டது. தந்தை உயிரிழந்த அதே முறையில் மகனும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.