சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தவெக அரசு மற்றும் திமுக கூட்டணி குறித்துப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தங்களால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை இபிஎஸ்ஸிடமே பேசித் தீர்த்திருக்க வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியான தவெகவில் இணைவது அழகல்ல என்றும், இதற்காக இபிஎஸ்ஸிடம் பேச தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அதிமுகவை அழிக்க நினைத்து தவெகவில் இணைந்தவர்களின் பெயர்கள் வரும் காலங்களில் கருப்பு எழுத்துகளால் எழுதப்படும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனே குதிரை பேரம் நடந்ததாகத் தான் கூறியதை நினைவூட்டினார். தங்களது கட்சியின் அப்போதைய எம்.எல்.ஏ காமராஜிடம் திருட்டுத்தனமாக ஆதரவு பெற்ற அமமுக தொடர்ந்த வழக்கில், குதிரை பேரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜயைத்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.
திமுக கூட்டணியின் இரவல் ஆதரவில்தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் ஆதரவை விலக்கினால் ஆட்சி முடிந்துவிடும் என்றும் எச்சரித்தார். தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தவெக எப்படி பல்டி அடிக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட தினகரன், தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் தூய சக்தி கிடையாது, அது ஒரு நாச சக்தி என்று கடுமையாகச் சாடினார்.
விஜய்க்கு வாக்களித்த 35 சதவீத மக்கள், நாம் தவறான முடிவை எடுத்து ஏமாந்துவிட்டோம் என்று கண்டிப்பாக உணர்வார்கள் என்றும், ஊழல் வழக்கு உள்ள முன்னாள் அமைச்சர்களைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு எப்படித் தங்களைத் தூய சக்தி என்று கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மாத்திரையைப் பொடியாக்கியதாகக் கூறும் அமைச்சர் முன்னிலையில் விஜய் எல்லாம் தோற்றுவிடுவார் போலிருக்கிறது என்று கிண்டலடித்த அவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து அரசியல் விலகல் கேட்கும் ‘சின்னப் பையன்’ நிர்மல் குமாரின் பேச்சு வேடிக்கையானது என்றார்.
இறுதியாக, “அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, தவெக அமைச்சர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும் என்று டிடிவி தினகரன் மிகக் காட்டமாகத் தனது பேட்டியை முடித்தார்.
