தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கடலில் புனித நீராடி வழிபாடு செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு ‘வேல்’ பரிசாக வழங்கப்பட்டது. எதிரிகளை வீழ்த்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, அவரது கட்சியின் சார்பில் அங்கு ‘சத்ரு சம்ஹார யாகம்’ நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டின் போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். விஜய் வருகையை அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே திரண்டதால் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் தரிசனத்தைத் தொடர்ந்து, விஜய் தனது அடுத்த ஆன்மீகப் பயணமாக வரும் 3-ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ‘தி கோட்’ பட வெளியீடு மற்றும் கட்சி மாநாட்டுப் பணிகளுக்கு இடையே அவர் சீரடி சென்று வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2024 ஏப்ரல் மாதத்திலும் அவர் சீரடி சாய்பாபா கோவிலில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும் என்ற நோக்கில், முக்கிய முடிவுகளுக்கு முன்னதாக விஜய் இது போன்ற ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்
