அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, 5,000 கோடி ரூபாய் சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாகவும், அந்தத் திட்டத்தை தான் முறியடித்ததால் அவர் தன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் செங்கோட்டையன் பேசினார். இதனால் தான் தனது வேட்புமனு மீது அதிமுகவினர் புகார் அளித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகள் கிடைக்க தான் விட்டுக்கொடுத்ததே காரணம் என்று கூறிய செங்கோட்டையன், அதற்குப் பரிசாகத் தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக வேதனை தெரிவித்தார். தன்னைத் துரோகி என்றும், டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறினார்.
கோபி தொகுதி மக்கள் தவெக-வின் விசில் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தனது உரையில் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
