தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கே ஒருவருக்கொருவர் ஓட்டுப் போடுவதில் உடன்பாடு இல்லை என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக பக்கமே நிற்கிறார்கள் என்றும் கூறினார்.

விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம்மோகன், தவெக திரைமறைவில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முயன்றதாகவும், அந்தக் கொள்கையற்ற முயற்சி ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

விஜய்யின் பேச்சு அப்பட்டமான பொய் என்றும், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.