அமெரிக்க விசா நேர்காணலின் போது இக்கட்டான சூழலில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த கௌரி குப்தா என்ற பெண்ணிற்கு, ‘பிளிங்கிட்’ நிறுவனம் செய்த துரித உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌரி குப்தா தனது விசா நேர்காணலுக்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.

அங்கு வரிசையில் காத்திருந்தபோதுதான், தனது விசா அங்கீகாரத்திற்குத் தேவையான சில முக்கிய ஆவணங்களைக் கொண்டுவர மறந்ததை அவர் உணர்ந்தார். நேர்காணல் நேரம் காலை 8 மணி என்பதால், வீட்டிற்குச் சென்று எடுத்து வருவது இயலாத காரியமாக இருந்தது.

இந்த இக்கட்டான நிலையில், அங்கிருந்த ஒரு காவலர் பிளிங்கிட் செயலியின் அச்சு எடுக்கும் சேவையைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தார். அதன்படி, கௌரி உடனடியாகத் தனது ஆவணங்களை அச்செயலியில் பதிவேற்றம் செய்தார். வியக்கத்தக்க வகையில் அடுத்த 15 நிமிடங்களிலேயே, தேவையான ஆவணங்கள் அச்சுப் பிரதிகளாக அவரிடம் வந்து சேர்ந்தன.

இந்நிலையில் இந்தத் துரித சேவையால் குறித்த நேரத்தில் நேர்காணலை முடித்த கௌரிக்கு அமெரிக்க விசாவும் கிடைத்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியால் சரியான நேரத்தில் கிடைத்த இந்தத் தீர்வு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.