பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்த லிகித் சிம்ஹாவுக்கும், ஐஸ்வர்யா என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் இறுதியில் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. “கண்ணே கருத்தே” எனப் பார்த்துக்கொள்ள வேண்டிய கணவனே, திருமணமான சில நாட்களிலேயே ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார்.

சந்தேகப் புத்தியால் ஐஸ்வர்யாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதால், மனமுடைந்த அவர் தனது பெற்றோரிடம் அழுது புலம்பியுள்ளார். மகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என எண்ணிய பெற்றோர், நேரில் வந்து மாப்பிள்ளைக்கு அட்வைஸ் செய்து இருவரையும் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றனர்.

பெற்றோர் சமாதானம் செய்து வைத்துவிட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே, லிகித் சிம்ஹா மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சண்டையிட்டுக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன ஐஸ்வர்யா, கணவர் வெளியே சென்ற நேரத்தில் தனது சேலையாலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டிற்குத் திரும்பிய கணவர், மனைவி சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் கதறினார். தகவலறிந்து வந்த போலீஸார், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்திற்கு மருமகனின் சந்தேகப் புத்தியே காரணம் எனப் பெற்றோர் புகார் அளிக்கவே, லிகித் சிம்ஹாவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.