கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் காதலிக்கும், அவரது நெருங்கிய நண்பர் துக்காராமுக்கும் இடையே ரகசியக் காதல் மலர்ந்துள்ளது. பிரதீப்புக்குத் தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் தனது காதலி வீட்டில் துக்காராம் நெருக்கமாக இருந்ததைக் கண்டு பிரதீப் அதிர்ச்சியடைந்தார்.
“கூடவே இருந்து குழி பறித்துவிட்டானே” என்ற ஆத்திரத்தில் துக்காராமை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பிரதீப், தனது மற்றொரு நண்பரான ஆரிஃப் என்பவருடன் சேர்ந்து பயங்கர திட்டம் தீட்டினார்.
திட்டமிட்டபடி மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி துக்காராமை ரயில் நிலையத்திற்கு வரவழைத்த பிரதீப்பும் ஆரிஃப்பும், அங்கு வைத்து அவரை நிர்வாணமாக்கிச் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்தனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிக்கோடி போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி பிரதீப்பை அதிரடியாகக் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் மற்றொரு கூட்டாளி ஆரிஃப்பை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். நண்பனுக்கு நண்பனே எமனாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
