திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், தனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் அனைத்து சமூக மக்களுக்கும் ஒரு வேலைக்காரனைப் போல இருந்து உண்மையாகப் பணியாற்றுவேன் என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் பாரம்பரியமிக்க இந்தப் பூமியில் பல தலைவர்கள் மாட்டு வண்டியில் வந்து பிரசாரம் செய்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், மற்றவர்களைப் போலப் பதவியை அனுபவிக்காமல் மக்களின் நலனுக்காக உழைப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்நிலையில் தனது தேர்தல் வாக்குறுதிகளாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அவர் முன்வைத்தார். குறிப்பாக, லால்குடி பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கனவான வாழை மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பேன் என்று உறுதி அளித்தார்.
இதனால் தான் எப்போதும் சொந்தப் பணத்தைச் செலவழித்தே மக்களுக்காகப் போட்டியிடுவதாகவும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவேன் என்றும் அவர் கூறினார். மன்சூர் அலிகானின் இந்த விசித்திரமான மற்றும் உணர்ச்சிகரமான பிரசாரம் தற்போது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
