காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார்.
இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் வைக்கோலை வயல்வெளியில் அடுக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பலத்த மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரிகரை போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை காலத்தில் உதவியாக இருக்கச் சென்ற மாணவன் இயற்கை சீற்றத்திற்கு பலியான செய்தி கிராம மக்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
