கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த பயிற்சி மாணவர்கள் லோகநாதன் தடுத்தும் கேளாமல் வலுக்கட்டாயமாக சிகிச்சை அளித்ததால், அவரது தொடை எலும்பு முறிந்து தற்போது முழுமையாகப் படுக்கையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறான சிகிச்சையால் தனது உடல்நிலை மேலும் மோசமானதாகக் கூறி, சம்பந்தப்பட்ட மையத்திடம் இருந்து ரூ. 1 கோடி இழப்பீடு பெற்றுத் தரக்கோரி கோவை நீதிமன்றத்தில் லோகநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.

எழுந்து நடமாட முடியாத சூழலில், ஆம்புலன்ஸ் மூலம் படுத்த படுக்கையாக அவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரது பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, நீதிபதியின் உத்தரவுப்படி நீதிமன்ற அதிகாரிகள் ஆம்புலன்ஸிற்கே நேரில் சென்று,

அவரிடம் கைரேகை பெற்று மனுவை ஏற்றுக்கொண்டனர். இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.