தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத்தை தேர்தல் ஆணையம் கணிசமாக உயர்த்தியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊதிய மாற்றியமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள 75,032 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் சுமார் 3.45 லட்சம் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

மேலும் இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் சுமார் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. புதிய ஊதிய உயர்வின்படி, தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வந்த 350 ரூபாய் தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட 250 ரூபாய் இனி 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக, இரண்டு நாள் கட்டாயப் பயிற்சி மற்றும் தேர்தல் நாள் பணி என கணக்கிட்டால், ஒரு தலைமை அதிகாரிக்கு ரூ.3,000, இதர வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தலா ரூ.2,600 மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.1,700 வரை மதிப்பூதியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.