குழந்தைகள் மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், குழந்தைகள் தவறுதலாக கீழே விழுந்துவிட்டால், பெற்றோர் அதிகமாக பதற்றப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் விழுந்தபோது அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றால், பெற்றோர் அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில், பெற்றோர் பதறினால், குழந்தைகள் தங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை ஆகிவிட்டது என்று நினைத்து பயந்து அழ ஆரம்பித்துவிடுவார்கள். இது குழந்தைகளுக்கு தேவையற்ற பயத்தை உருவாக்கலாம்.

அதற்கு பதிலாக, குழந்தைகள் கீழே விழுந்து காயம் இல்லாத பட்சத்தில், “விழுந்துட்டியா? எழுந்து வா!” என்று எளிமையாகவும் அமைதியாகவும் சொன்னால், குழந்தைகள் இது பெரிய விஷயமில்லை என்று புரிந்துகொள்வார்கள். இப்படி செய்வது குழந்தைகளை எளிதாக எழுந்து தொடர்ந்து விளையாட வைக்கும். மேலும், இது அவர்களுக்கு எந்த சூழ்நிலையையும் பயமின்றி எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்கும் என்று ஹரிணி ஸ்ரீ கூறியுள்ளார். இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு மனவலிமையையும் தன்னம்பிக்கையையும் கொடுக்க உதவும்.