லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (55) மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகிய தம்பதியினர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூத்த மகன் மற்றும் மகள் கனடாவில் வசித்து வரும் நிலையில், இளைய மகன் லூதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், “வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்” என்றும், தங்களது முடிவுக்குக் குழந்தைகள் காரணமல்ல என்பதால் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளைக் கனடா அனுப்பத் தனது நிலத்தை விற்ற குர்மீத் சிங், மன அழுத்தத்தில் இருந்த மனைவியின் சிகிச்சைக்காகப் பெருமளவு பணத்தைச் செலவழித்து நிதி நெருக்கடியில் சிக்கியதே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஆனால், இவர்களது இளைய மகன் குஷ்மிந்தர் சிங் தனது பெற்றோரின் கடிதத்தில் உள்ள “வறுமை” என்ற வார்த்தையை நம்ப மறுக்கிறார். தங்களது உடன்பிறப்புகள் அனைவரும் பெற்றோருக்குப் பண உதவி செய்து வந்ததாகவும், விரைவில் அவர்களைக் கனடாவிற்கு அழைத்துச் செல்லவும், புதிய வீடு கட்டவும் திட்டமிட்டிருந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

குர்மீத் சிங் தனது மனைவியின் உடல்நலக் குறைவால் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும், அந்தத் துயரம் தாங்காமலேயே இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.