மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 26 வயது இளம்பெண் ஒருவரை அவரது 21 வயது வளர்ப்பு மகன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரியில் பயின்று வரும் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா என்ற அந்த இளைஞன், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தனது வளர்ப்புத் தாயை மிரட்டி இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் கர்ப்பமடைந்ததை அடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்துத் தனது கணவரிடம் முறையிட்டபோது, குடும்ப கௌரவம் மற்றும் மகனின் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி அவர் அமைதி காக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே வீட்டில் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதோடு, இந்த வழக்கில் மேல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத நிலையும், பாதிக்கப்பட்ட பெண்ணை அமைதியாக இருக்கச் சொல்லி வற்புறுத்திய கணவரின் போக்கும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
