தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் சித்தல்பள்ளி கிராமத்தில், புதிய கைபேசி வாங்கித் தராததால் 20 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் சாய் குமார், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அவரது பழைய கைபேசி உடைந்து போனதால், தனது பெற்றோரிடம் புதிய கைபேசி வாங்கித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

​சாய் குமாரின் பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்பதால், பொருளாதார நெருக்கடி காரணமாக உடனடியாகப் புதிய கைபேசி வாங்கித் தர இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாய் குமார், சம்பவத்தன்று இரவு மது போதையில் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நள்ளிரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் அவரது சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். மொபைல் போன் மோகத்தால் ஒரு இளம் உயிர் பிரிந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.