மும்பை தெற்குப் பகுதியிலுள்ள பைதுனி பகுதியில் வசித்து வந்த டோகாடியா குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த நகரையே உலுக்கியுள்ளது. பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட விஷபாதிப்பால் இவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டமாகத் தெரிந்தது. ஆனால், தடயவியல் சோதனையில் இவர்களின் உடலில் எலி மருந்தில் பயன்படுத்தப்படும் ‘ஜின்க் பாஸ்பைடு’ (Zinc Phosphide) என்ற நச்சுப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

​தற்போது இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டோகாடியா குடும்பத்தினர் வீட்டில் கைப்பற்றப்பட்ட எலி விரட்டும் மருந்து முற்றிலும் இயற்கையான மூலிகைகளால் (Herbal) ஆனது என்றும், அதில் ‘ஜின்க் பாஸ்பைடு’ கலக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த மருந்தில் நச்சு இல்லாதபோது, உயிரிழந்தவர்களின் உடலிலும் அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி பழத்திலும் இந்த நச்சு எப்படி வந்தது என்பது பெரும் மர்மமாகியுள்ளது. இது தற்கொலையா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.