மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியாவின் பாதுகாப்புப் பெட்டகமாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் சூரத்’ போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பலை, இந்தியப் பெருங்கடல் அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களைத் தேவைப்பட்டால் மீட்கவும் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் சூரத்’ போர்க்கப்பல், எதிரிகளின் ரேடாரில் சிக்காத ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்டது. சுமார் 7,400 டன் எடை கொண்ட இந்த நவீன போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் மற்றும் பராக்-8 போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி எதிரிகளைத் துல்லியமாக அழிக்க முடியும்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இந்தியா நேரடி கண்டனம் தெரிவிக்காத நிலையில், ஓமன் வளைகுடாவில் இவ்வளவு வலிமையான கப்பலை இந்தியா நிறுத்தியிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தற்போதைக்குக் கருதப்படுகிறது.
