தமிழக கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு 9,900 ரூபாய் முதல் 39,600 ரூபாய் வரையிலும், கட்டுநர்களுக்கு 9,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலும் காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக பணியில் சேருபவர்களுக்கு ஓராண்டு வரை தொகுப்பூதியமாக விற்பனையாளர்களுக்கு 7,500 ரூபாயும், கட்டுநர்களுக்கு 6,600 ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில் 55 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வும் இனி இவர்களுக்கும் பொருந்தும்.
இது தவிர, சென்னை மற்றும் இதர பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு தகுந்தவாறு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி மற்றும் 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு ஆகியவையும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊதிய உயர்வு கடந்த ஐந்து ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, குழுவின் பரிந்துரைப்படி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
