நிக்கியை ரூ.35 லட்சம் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்து மகன் கண்முன்னே உயிருடன் எரித்துக் கொன்ற விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான கணவர் விபின்,  போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு பிடித்தனர்.

அவரை கைது செய்ய முயற்சித்தபோது, தப்பிக்க முயன்றதால் போலீசார் எச்சரிக்கை காக்கியாக காலில் சுட்டனர். பின்னர், விசாரணையின் போது, விபின் மீது இக்கொலைக்கான முழுமையான பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது தாயார் தயாவதி கைது செய்யப்பட்டுள்ளார். இது நிக்கி கொலை வழக்கில் போலீசார் மேற்கொண்ட இரண்டாவது முக்கிய கைது என குறிப்பிடப்படுகிறது.

தற்போது, நிக்கியின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தந்தை மற்றும் சகோதரி காஞ்சன், விபின் குடும்பத்தினர் — பாட்டி, மாமியார் தயாவதி, மைத்துனர் ரோஹித் மற்றும் மாமனார் சத்வீர் ஆகியோர், நிக்கியை திட்டமிட்டு உயிருடன் எரித்து கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, மாமியார் தயாவதி தீப்பிடிக்கும் திரவத்தை கொண்டுவந்து, அதை விபின் நிக்கி மீது ஊற்றி, உயிரோடு எரிக்கச் செய்துள்ளார். இதில் மற்ற குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது முதல் தகவல் அறிக்கையில் (FIR) கொலை, திட்டமிட்டு கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மேலும் தொடர்புடையவர்களை பிடிக்க இரண்டு தனி விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை தரப்பில், “இது ஒரு கொடூர கொலை ” எனக் கூறி, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாதென்று தெரிவித்துள்ளனர்.