பிரேசிலின் குவாரா நகரில் உள்ள பார்க் ஷாப்பிங்கில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 20 வயதான அலிசியா ஸ்பைஸ் என்ற கட்டிடக்கலை மாணவி, ஜாரா கடையின் டிரஸ்ஸிங் அறையில் துணிகளை அணிய முயன்றபோது திடீரென அவரது காலில் தேள் ஏறி கொட்டியது.

இதனால் கடும் வலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஆசா நோர்டே பிராந்திய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

சம்பவம் நடந்த உடனே கடை ஊழியர்கள் அலிசியாவுக்கு முதலுதவி செய்து, சக்கர நாற்காலியில் வைத்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அலிசியா சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த சம்பவம் கடை மற்றும் ஷாப்பிங் மாலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பார்க் ஷாப்பிங் நிர்வாகம், “இது நடந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். சம்பவம் நடந்தவுடன் உடனடியாக வாடிக்கையாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. எங்கள் மால் கடுமையான பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறது; வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை” என்று தெரிவித்தது.

அதேபோல், ஜாரா நிறுவனம், “இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நடைபெறாதபடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.