ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரத் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் மீது நேரடி தாக்கம் நிகழ்ந்துள்ளது.
பஹவல்பூர் பகுதியில் உள்ள ‘ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா’ கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளாகி, ஜெய்ஷ் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும், அவருடைய 4 நெருங்கிய உதவியாளர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 14 பேரும் ஒரே இடத்தில் விருந்தில் பங்கேற்று கொண்டிருந்த வேளையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலளித்த மசூத் அசார், “என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாவின் விருந்தினர்களாகி விட்டனர். இந்த உயிரிழப்பில் எனக்கு வருத்தம் இல்லை. மாறாக, நானும் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமென என் மனதில் தோன்றுகிறது” என கூறியிருக்கிறார். அவருடைய பேச்சு, வன்முறையை மேலும் தூண்டும் வகையில் உள்ளதாகவும், அதில் தீவிரவாத ஆவலும் வெளிப்படுவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
மசூத் அசார் கடந்த 1994-ல் போலி அடையாளத்தில் காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர். 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது பயணிகளை மீட்பதற்காக இந்தியாவில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் (2001), மும்பை தாக்குதல் (2008), பதான்கோட் தாக்குதல் (2016), புல்வாமா தாக்குதல் (2019) ஆகியவற்றில் மசூத் அசாருக்கு நேரடி தொடர்புகள் உள்ளன என்று இந்திய பாதுகாப்பு அமைப்புகள் பலமுறை தெரிவித்துள்ளன.
இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என 2019-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்த தாக்குதலில் அவரது குடும்பத்தினர் பலியானதை, இந்திய ராணுவத்தின் துல்லிய நடவடிக்கை எனக் கூறி நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.
