கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்துப் புஷ்பாவதியின் மகள் சுசித்ராவிடம் கேட்டபோது, அது கொசு கடித்த தழும்பு என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அனில் குமார், உடனடியாகத் தகனம் செய்வதைத் தடுத்து நிறுத்தி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீசார் நடத்திய பிரேதப் பரிசோதனையில், புஷ்பாவதி மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், அவர் தூக்கத்தில் இருந்தபோது மூச்சுத்திணறச் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. புஷ்பாவதி சமீபத்தில் ஒரு சொத்தை விற்று 40 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.

அந்தப் பணத்தைப் பறிப்பதற்காக அவரது மகள் சுசித்ராவும் மருமகன் சுரேஷும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்தத் தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.