உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில், தாயே தன் மகனைப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சிங் என்ற பெண்மணி, தனது 6 வயது மகன் பிரபு சிங்கின் கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயையும் மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது தொடர்பாக சிறுவனின் தந்தை சந்தீப் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூரமான கொலைக்கு பின்னணியில் குடும்பத் தகராறு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தாய் கீர்த்தி சிங், தனது மகனை அடிக்கடி சிறு விஷயங்களுக்காக அடித்துத் துன்புறுத்தும் வழக்கம் கொண்டவர் என்றும், இதனை அவரது மாமியார் சுனைனா கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை சிறுவன் பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மீண்டும் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் தறிகெட்ட கீர்த்தி சிங், பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தனது மகனை அறைக்குள் அழைத்துச் சென்று அவனது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
