நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த மோசடியின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. ராஜஸ்தானின் ஜாம்வா ராம்கர் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த வினாத்தாளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சகோதரர்களில் ஒருவர், சீகர் பகுதியில் நீட் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகனுக்காக இந்த வினாத்தாளைப் பெற்றுள்ளார். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பேரம் முடிந்து, வினாத்தாள் கைமாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வலைப்பின்னல் வெறும் ஒரு குடும்பத்துடன் நிற்காமல், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் வழியாக சுமார் 700 மாணவர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. வினாத்தாளை வாங்கிய அந்தத் தந்தை, சீகரில் விடுதி நடத்தும் ஒருவரிடம் இதைப் பகிர்ந்துள்ளார். அவர் மூலம் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கும் இது பரவியுள்ளது.

இந்நிலையில் தேர்வுக்குப் பிறகு, உண்மையான வினாத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, சுமார் 135 கேள்விகள் அப்படியே ஒத்துப்போனது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், பல மாநிலங்களில் உள்ள தேர்வு மோசடி கும்பல்களுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.