மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான முன்னாள் அழகியும் MBA பட்டதாரியுமான இளம்பெண் ஒருவர், கடந்த மே 12-ம் தேதி அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

வரதட்சணை கொடுமை மற்றும் கணவர் குடும்பத்தாரின் மன உளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் மற்றும் தலைமறைவாக இருக்கும் கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்தச் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன மருமகள் குறித்துப் பேசிய அவர், “அவள் வீட்டில் ஒழுங்காக சமையல் செய்ய மாட்டாள், பூஜையின் போது அகர்பத்தி கூட பற்ற வைக்க மாட்டாள், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூட மறந்து விடுவாள்” என்று அடுக்கடுக்கான அற்பக் குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரது தற்கொலையைச் சாதாரணமாகச் சித்தரிக்க முயன்றுள்ளார்.

மேலும், மருமகளுக்கு மனநலப் பிரச்சனை இருந்ததாகவும், கஞ்சா உபயோகித்ததாகவும் அவர் பழிசுமத்தினார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கஞ்சா பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனப் போலீஸ் கமிஷனர் மறுத்துள்ளார்.