மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் விமான நிலையத்தில், தொழிலதிபரான அஜய் சிங் என்பவர் டெல்லி செல்லவிருந்த போது, அவரது பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கிருந்த போதைப்பொருள் கண்டறியும் எலக்ட்ரானிக் இயந்திரம் (ETD), அஜய் சிங்கின் பையில் இருந்த பிராண்டட் ‘ஆம்சூர்’ (மாங்காய் பொடி) மற்றும் ‘கரம் மசாலா’ பாக்கெட்டுகளில் ஹெராயின் போன்ற போதைப்பொருள் இருப்பதாகத் தவறாகக் காட்டியது.
இதை நம்பிய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் உள்ளூர் போலீசார், உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.
மாநிலத்தில் போதிய ஆய்வக வசதிகள் இல்லாததால், அந்த மசாலா பாக்கெட்டுகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், அதில் எந்த போதைப்பொருளும் இல்லை, அவை வெறும் சமையல் மசாலாத்தூள் தான் என்பது உறுதியானது.
இந்தத் தவறான புரிதலால், எந்தத் தப்பும் செய்யாத அஜய் சிங் சுமார் 57 நாட்கள் (கிட்டத்தட்ட 2 மாதங்கள்) சிறையில் வாட வேண்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தீபக் கோட், அதிகாரிகளின் அலட்சியத்தையும், மாநில தடயவியல் துறையின் மெத்தனப் போக்கையும் கடுமையாகச் சாடினார்.
ஒரு இயந்திரத்தின் ஆரம்பக் குறியீட்டை மட்டுமே நம்பி, முறையான ஆய்வக சோதனை இல்லாமல் ஒரு அப்பாவி மனிதனின் சுதந்திரத்தைப் பறித்தது சட்டவிரோதக் காவல் என்று நீதிமன்றம் கொதித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட அஜய் சிங்கிற்கு 3 மாதங்களுக்குள் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
