விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீ வைத்த நபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா, தனது முதல் கணவரின் மறைவுக்குப் பிறகு அக்பர் அலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

மேலும் முதல் கணவரின் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அக்பர் அலி ஏற்கனவே இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அக்பர் அலி அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் படுகாயமடைந்த அக்பர் அலி, செய்யது அலி பாத்திமா, அவரது தாய் சிக்கந்தர் பீவி மற்றும் 13 வயது சிறுவன் பாரூக் ஆகிய நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கிய செய்யது அலி பாத்திமாவின் 18 வயது மகள் பர்வீன் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பணத்தாசை மற்றும் குடும்பப் பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.