தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சீமானின் பேச்சைக் கேட்டு உற்சாகமடைந்து “அண்ணா பேசுங்கள், பேசுங்கள்” என்று கோஷமிட்டவாறு அங்கேயே நின்றார். அந்த இடம் திருநெல்வேலி – திருச்செந்தூர் பிரதான சாலை என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினரும், நாம் தமிழர் கட்சியினரும் அறிவுறுத்தினர்.

இருப்பினும், அந்த இளைஞர் அங்கிருந்து நகர மறுத்து அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்து தள்ளியதால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதே நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் துண்டினை அணிந்து கிண்டலாகச் சிலர் மேடை நாடகத்தில் பங்கேற்றது மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் போக்குவரத்தைச் சீர் செய்தது போன்ற சுவாரஸ்யமான காட்சிகளும் அரங்கேறின.