சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த சமீர் என்பவர், நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த தவெக ஆதரவாளர்கள் சிலர் சமீரின் வீட்டிற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியது.

தகராறு முற்றிய நிலையில், இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்ற சமீரின் வீட்டு உரிமையாளரான ரமேஷ் என்பவரை, மோதலில் ஈடுபட்ட ஒருவர் எதிர்பாராத விதமாக முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ரமேஷின் மூக்கு உடைந்து பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.