திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் மாடியில் கட்டப்பட்டிருந்த சேலைத் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கழுத்து சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வரும் சதீஷ் (41) ஆட்டோ டிரைவர். மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15), ஹரிஹரன் (13) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவ்யஸ்ரீ 10-ம் வகுப்பிலும், ஹரிஹரன் 8-ம் வகுப்பிலும் படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, மீனாவின் உறவினரான ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நந்தினி, பிரசவத்திற்காக இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது குழந்தைக்காக வீட்டின் மாடிப்படுக்கும் அறையில் சேலையால் தொட்டில் கட்டப்பட்டது. நந்தினி அவர் வீட்டிற்கு  திரும்பிய பின்னரும் அந்தத் தொட்டில் அவ்வாறே இருந்தது. இதில் ஹரிஹரன் வழக்கமாக விளையாடிவந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம்  மாலை, பள்ளியில் இருந்து மகன் ஹரிஹரனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, சதீஷ் மீண்டும் சவாரிக்கு சென்றார். அதே நேரத்தில், மீனாவும் பவ்யஸ்ரீயும் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். வீட்டில் ஹரிஹரன் மட்டும் இருந்தார்.

அப்போது அவர் வழக்கம்போல் மாடி அறையில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடும் போது சேலை முறுக்கிக் கொண்டு கழுத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.

சில நேரம் கழித்து வீடு திரும்பிய மீனா, தனது மகன் தொட்டிலில் சேலைக்குள் கழுத்து மாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் செய்தி குடும்பத்தினரை பெரும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.