மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் லிட்டருக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக உள்ளூர் சந்தையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 170 ரூபாய்க்கும் பாமாயில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 122 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவைகள் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் இந்த போர்ச் சூழல் நீடித்தால், வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இது நடுத்தரக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.