ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பெண் கன்டென்ட் கிரியேட்டர் சித்தேஸ்வரி சுகந்த், சார்மினார் பகுதியில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஆட்டோவிற்காகக் காத்திருந்தபோது அவருக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இர்ஃபான் என்ற நபர், சித்தேஸ்வரியை அணுகி “எங்கே செல்கிறீர்கள், நான் உங்களை டிராப் செய்யவா” என்று கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த அந்த பெண், அவர் ராபிடோ டிரைவரா என்று வினவி, அவரது டிரைவர் அடையாள அட்டையைக் (ID) காட்டுமாறு கேட்டுள்ளார். மேலும் அந்த நபரின் வாகனத்தில் பதிவு எண் இல்லாததை கவனித்த சித்தேஸ்வரி, ஏன் வண்டி எண் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த நபர் ஐடியைக் காட்டுவதற்குப் பதிலாகத் தன் மொபைலில் உடனடியாக ராபிடோ செயலியைப் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் போனை சித்தேஸ்வரி பறித்துப் பார்த்தபோது அதில் ஓடிபி உள்ளிடும் பக்கம் மட்டுமே திறந்திருந்தது. மேலும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று கூறி சாக்குப்போக்கு சொன்ன அந்த நபரை, “வண்டியே ஸ்டார்ட் ஆகாதபோது எப்படி டிராப் செய்கிறேன் என்று கூறினாய், உடனடியாக இங்கிருந்து கிளம்பு” என அந்தப் பெண் உரத்த குரலில் எச்சரித்து விரட்டியடித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தெளிவுபடுத்திய சித்தேஸ்வரி, தான் ராபிடோ நிறுவனத்தைக் குறை சொல்லவில்லை என்றும், அந்தச் சேவையை தான் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இரவு நேரங்களில் போலி டிரைவர்கள் என்ற பெயரில் உலவும் நபர்களிடம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
