கேரள மாநிலம் கொச்சியில், வெளிநாட்டில் உள்ள காதலனை ஏமாற்றுவதற்காகத் தன்னை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்ப் புகார் அளித்த இளம்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொச்சியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) மருந்தாளுநராகப் பணியாற்றி வரும் அந்த இளம்பெண், சமீபத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தன்னை மர்ம நபர்கள் காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகவும்” அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இளம்பெண் கூறியபடி கார் எதுவும் வரவில்லை. மாறாக, அவர் ஒரு இளைஞருடன் சகஜமாகப் பேசியபடி நடந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
போலீசார் அந்த வீடியோவைக் காண்பித்து நெருக்கடி கொடுத்தபோது, இளம்பெண் தனது நாடகத்தை ஒப்புக்கொண்டார். அதாவது அந்த இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களைக் காதலித்து வந்துள்ளார். ஒருவர் உள்ளூரிலும், மற்றொருவர் வெளிநாட்டிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, உள்ளூர் காதலனுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டில் உள்ள காதலன் போன் செய்துள்ளார். உள்ளூர் காதலன் அருகில் இருந்தபோது, வெளிநாட்டு காதலனிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர் பேசிய சத்தம் வெளிநாட்டில் இருந்த காதலனுக்குக் கேட்டுள்ளது. “உன் அருகில் இருப்பது யார்?” என்று அவர் சந்தேகத்துடன் கேட்க, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இளம்பெண் ‘கடத்தல்’ கதையை உருவாக்கியுள்ளார்.
“யாரோ என்னைக் கடத்துகிறார்கள்” என்று போனில் கத்திவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை உண்மை என நம்ப வைக்கவே, காவல்துறைக்கும் போன் செய்து புகார் அளித்துள்ளார்.
வீணாகப் போலீசாரை அலைக்கழித்தது மற்றும் தவறான தகவல்களை அளித்து அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் அந்த இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
