தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், காரில் அமர்ந்தபடி குப்பைகளை வீசிய நபரை இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, வெள்ளை நிற மாருதி சுசூகி கார் ஒன்று நின்றிருந்தது. அந்தக் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், தான் சாப்பிட்ட ‘கேஎஃப்சி’ (KFC) உணவின் காகித உறைகளையும், கழிவுகளையும் சாதாரணமாகச் சாலையிலேயே வீசியுள்ளார். பொது இடத்தில் குப்பை கொட்டுவதைப் பற்றிய எந்தவொரு கவலையுமின்றி அவர் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அருகில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், இந்த அநாகரீகச் செயலைத் தனது செல்போனில் படம்பிடித்தபடி அந்த நபரைத் தட்டிக்கேட்டார். “சாலையில் ஏன் குப்பை போடுகிறீர்கள்? காரை விட்டு கீழே இறங்கி, நீங்கள் போட்ட குப்பையை நீங்களே எடுங்கள்” என்று இந்தி மொழியில் ஆவேசமாகக் குரல் எழுப்பினார்.

ஆனால், அந்த ஓட்டுநர் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “போலீசாருக்குத் தகவல் தெரிவிப்பேன், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று இளைஞர் எச்சரித்தபோதும், அந்த நபர் காரை விட்டு இறங்க மறுத்துவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கண்டனத்தைப் பெற்றது. இது குறித்து டெல்லி போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொது இடங்களில் தூய்மையைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.