பீகாரின் முசாபர்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்த தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பயணிக்கு, இருக்கை இருந்தும் அமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரி தலையிட்டு அவருக்கு இருக்கையை மீட்டுக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
தென் கொரியப் பயணி ஒருவர் தனது பயணத்திற்காக உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட் வைத்திருந்தார். ஆனால், அவர் ரயிலில் ஏறியபோது, அவரது இருக்கையைச் சில உள்ளூர் பயணிகள் ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர். ஒருவர் அந்த இருக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் அந்த வெளிநாட்டுப் பயணி தனது உடைமைகளுடன் ரயிலின் கதவு அருகிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆர்.பி.எஃப் (RPF) அதிகாரி, அந்தப் பயணியிடம் விசாரித்தார். அவர் தனது டிக்கெட்டைக் காட்டியதும், அந்த இருக்கைக்குச் சென்ற அதிகாரி, ஆக்கிரமிப்பு செய்திருந்த பயணிகளைக் கடுமையாக எச்சரித்தார்.
A Korean traveler with a confirmed spot in the general coach from Muzaffarpur to New Delhi was denied a seat by some young men—until an RPF officer stepped in and got him one. Guest treatment on point!
pic.twitter.com/xmdyaBlwRM— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 13, 2026
அந்தப் பயணிகளிடம் பேசிய அதிகாரி, “இவர் நமது நாட்டிற்கு முதன்முறையாக வந்திருக்கலாம். விருந்தினராக வந்தவரை இப்படி நிற்க வைத்துவிட்டு, நீங்கள் படுத்துக்கொண்டு செல்வது முறையா? கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என்று உருக்கமாகக் கூறினார். இதனையடுத்து அந்தப் பயணிகள் இருக்கையை விட்டு நகர, கொரியப் பயணி தனது இடத்தில் அமர்ந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஆர்.பி.எஃப் அதிகாரியின் செயலைப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள், அதேசமயம் வெளிநாட்டுப் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பயணிகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“நமது நாட்டின் நற்பெயரைக் காக்க இது போன்ற சிறிய நேர்மையான செயல்கள் அவசியம்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “பொதுப் பெட்டிகளில் (General Coach) நிலவும் கூட்ட நெரிசலும், இடத்தைப் பிடிப்பதில் நடக்கும் மோதல்களும் இந்திய ரயில்களில் தீராத பிரச்சினையாக உள்ளது” என்று மற்றொருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கேரளாவில் கொச்சியிலிருந்து வர்க்கலா சென்ற வெளிநாட்டுப் பயணிகள் மூவர், கூட்ட நெரிசல் மிகுந்த பொதுப் பெட்டியில் கழிவறை அருகே அமர்ந்து பயணித்த வீடியோவும் இதேபோல் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ரயில்களில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதன் மூலம் வலுத்துள்ளது.
