பெங்களூருவை 2009-ல் உறைய வைத்த ஓய்வுபெற்ற ஐஐஎஸ்சி (IISc) பேராசிரியர் புருஷோத்தம் லால் சச்தேவ் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பேராசிரியர், அவரது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி மகன் ஆகிய மூவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், அந்த வீட்டில் வேலை செய்த தீபக் ஹல்தார் மற்றும் அவரது மனைவி சுசித்ரா உள்ளிட்ட நால்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் பூவையா தலைமையிலான குழு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, மேற்கு வங்கத்தின் நக்சலைட் நடமாட்டம் உள்ள குக்கிராமம் ஒன்றில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை 2000 கி.மீ தூரம் பயணித்துத் துணிச்சலாகக் கைது செய்தனர்.

2016-ல் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கீழ் நீதிமன்றம் இவர்களை விடுவித்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ரேஷ்மி படேல் முன்வைத்த “கடைசியாகப் பார்த்த சாட்சி” (Last seen theory) மற்றும் டிஎன்ஏ ஆதாரங்கள் அடிப்படையில், தற்போது உயர் நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேராசிரியரின் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளது பெங்களூரு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.