புனே அருகே  உள்ள குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட் கதவில் சிறுமி ஒருவரின் கை சிக்கிய அதிர்ச்சிகரமான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது  பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வழக்கம்போல் லிஃப்டைப் பயன்படுத்தி வந்தனர். அப்போது, இரு சிறுமிகள் தங்கள் குடும்பத்தினருடன் லிஃப்டில் ஏறியுள்ளனர். லிஃப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து அதன் கதவு திறந்தபோது, ஆர்வக்கோளாறில் சிறுமி ஒருவர் தனது கையை வெளியே நீட்டியுள்ளார். எதிர்பாராதவிதமாக, அந்தக் கணம் லிஃப்ட் கதவு மூட முயன்றபோது, சிறுமியின் கை கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக லிஃப்ட்டை நிறுத்தி, பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிறுமியின் கையை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் சிறுமிக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “லிஃப்ட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்” எனச் சிலர் வலியுறுத்துகின்றனர். அதேசமயம், “குழந்தைகளுடன் லிஃப்ட்டில் பயணம் செய்யும்போது, பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; அவர்களைக் கண்காணிக்கத் தவறுவது இத்தகைய விபத்துகளுக்கு வழிவகுக்கும்” எனப் பலர் எச்சரித்து வருகின்றனர்.