தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமீபகாலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் அவரது நற்பணி இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிரடியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கங்களைச் செயல்படுத்துவதற்கான புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாற்றிய தனுஷ், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், தனது ரசிகர்களை வெறும் சினிமா ரசிகர்களாக மட்டும் வைத்திருக்காமல், தீவிர சமூகப் பணிகளில் ஈடுபடுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனிடையே, தனுஷுக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தனுஷ் தரப்பில் அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கோவையில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தனியாக நிர்வாகிகளை நியமித்திருப்பது அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. இந்த நியமன போஸ்டரில் அரசியல் கட்சிகளைப் போலவே தொகுதிவாரியாக பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், தனுஷை ‘தலைவர்’ என்று குறிப்பிட்டிருப்பது மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
