அழகான மற்றும் ஆரோக்கியமான சருமம் பெற வெளிப்புறப் பராமரிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நாம் உட்கொள்ளும் உணவும் மிக முக்கியமாகும். விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட, சத்தான உணவுகளை அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும். சருமத்தை எப்போதும் இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவும் சில முக்கிய உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்.

சருமப் பொலிவிற்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகச் சிறந்த தேர்வாகும். குறிப்பாக கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதுகாக்குகின்றன. மேலும், தக்காளி மற்றும் கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரியனின் புறஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாத்து, கரும்புள்ளிகள் உருவாகாமல் தடுக்கின்றன.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகளில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, இயற்கை பளபளப்பைத் தருகின்றன. அதேபோல், பாதாம், வால்நட்ஸ் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமம் வறண்டு போவதைத் தடுக்கின்றன.

இவற்றுடன் உடலை எப்போதும் சீரான ஈரப்பதத்துடன்   வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்குத் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதுடன், இளநீர் மற்றும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முகப்பருக்கள் வருவதைக் பெருமளவு குறைக்கின்றன. இந்தச் சத்தான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி ஆரோக்கியமான மற்றும் மிளிரும் சருமத்தைப் பெற முடியும்.