சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள புந்தேலி கிராமத்தில், குடிபோதையில் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.
சலிக் ராம் என்ற கூலித் தொழிலாளிக்கும், அவரது மனைவி சைத் கன்வருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சலிக் ராம், கத்தியால் தனது மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மனைவியின் வெட்டப்பட்ட தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, கிராமம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளார்.
வழியில் பார்த்தவர்களிடமெல்லாம் பையைத் திறந்து வெட்டப்பட்ட தலையைக் காட்டி, தானே கொன்றதாகக் கூறி அந்த நபர் பயங்கரத்தை ஏற்படுத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சலிக் ராமை கைது செய்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே இருந்த சந்தேகமும், குடும்பச் சண்டையுமே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பயங்கரமான சம்பவத்தால் அந்தக் கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், நான்கு சிறு குழந்தைகள் தங்கள் தாயை இழந்து தவிக்கின்றனர்.
